அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வெளியான செய்திக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மறுப்புத் தெரிவித்துள்ளது கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அதிமுக அமைச்சர் தங்கமணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதிமுகவுடன் தமாகா கூட்டணி உறுதி, தமாகா வுக்கு எத்தனை தொகுதி என்று முடிவு செய்யப்படவுள்ளது என்ற செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிஸ் தலைவர் ஜி.கே.வாசன் திடீரென கூட்டணி குறித்து விளக்கமளித்தார். கூட்டணி குறித்து தமாகா சார்பில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், கட்சியின் நிலைப்பாடு குறித்து தாமோ, கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகனோ மட்டுமே அறிவிக்கும் அதிகாரம் உள்ளது என்ற கூறியுள்ளார்.
இதனால் அமைச்சர் தங்கமணியுடன் விடியல் சேகர் கூட்டணிப் பேச்சு நடத்திய விவகாரத்தில் தமிழ் மாநில காங்கிரசுக்குள் சர்ச்சை வெடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.