பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

by Isaivaani, Jan 23, 2018, 18:03 PM IST

பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 67% முதல் 108%  வரையிலான ரூ.3,600 கோடி அளவிலான பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.

தமிழக அரசு முன்கூட்டியே தெரிவிக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனை தொடர்ந்து கட்டண உயர்வை கண்டித்து பொது மக்களும், மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே கடிதத்தில் மாநிலம் முழுவதும் மக்களின் போராட்டத்திற்கு அரசு மதிப்பு அளித்து கட்டணத்தை திரும்பிப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின், விலைவாசி உயர்வால் பாதித்துள்ள மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வு இரட்டிப்பு சுமையானது என்று குறிப்பிட்டார்.

வருமானம் உள்ள வழிதடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்து போக்குவரத்துக் கழகத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்துக் கழகத்தை நிர்வகிக்க நினைப்பது முறையல்ல என்றும் அரசு பேருந்து கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் உறைந்து போயுள்ளனர் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை  உயர்வை எல்லாம் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மக்கள் தலையில் சுமத்துவது என்பது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து மக்களின் நலத்துக்காக அரசுடைய வேறு துறையிலிருந்து நிதி ஒதுக்கியாவது பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை