அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்ததற்கு அக்கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக் கட்சியின் மாநில இளை ஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன் விலகினார். இந்நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் ரஞ்சித் இன்று விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், மதுக்கடைக்கு எதிராக போராடிய பாமக, மதுக்கடை நடத்துபவர்களுடன் நொடிப்பொழுதில் கூட்டணி சேர்ந்ததை ஏற்க முடியவில்லை. அதிமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறிவிட்டு அந்தக் கட்சியுடனே கூட்டணி வைப்பது என்ன நியாயம்? கட்சியில் யாருடனும் கருத்துக் கேட்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது வேதனை அளிக்கிறது.
அதிமுக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி அமைத்துள்ளதாக பாமக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. இனிமேலும் பாமகவுக்கு கூஜா தூக்க விரும்பவில்லை என்று கூறிய ரஞ்சித், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.