வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாமக - அதிமுக கூட்டணி உடன்படிக்கை செய்துள்ளது. அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டணி கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. காரணம் இரண்டு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது தான். இதனால் வலைதளங்களில் அந்தக் கட்சிக்கு எதிராக ட்ரோல்கள் வெளியாக ஆரம்பித்தன. இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என அன்புமணி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் செய்தியாளர்கள் இடையே வாக்குவாதம் செய்தார்.
பிரபல ஆங்கில டிவியின் செய்தியாளர் சபீர் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்க, கோபமடைந்த அன்புமணி, ``நான் அப்போதே கூறிவிட்டேன் சபீர். உட்காருங்கள். வரம்பு மீறாதீர்கள். அவங்ககிட்ட இருந்து மைக்கை வாங்குப்பா... சட்டப் பேரவையில மைக் ஆப் பண்ற மாதிரி மைக் ஆப் பண்ணுங்க' என்று கடுகடுப்புடன் கூறினார். தொடர்ந்து அவர் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்க, ``அநாகரிகமாக நடந்துகொள்ளாதீர்கள் சபீர். எல்லாத்துக்கும் ஓர் எல்லை உண்டு" என்று கடுப்புடன் கூறினார். இப்படி கூறியதுடன் சிறிது நேரத்தில் அன்புமணி பேட்டியை முடித்துக்கொண்டார்.
இதற்கிடையே, அன்புமணியிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த செய்தியாளர் சபீரை பாமக விசுவாசிகள் ட்விட்டரில் வறுத்தெடுத்தனர். அவரை வசைபாடியது மட்டுமில்லாமல், #OneMoreQuestionShabbir என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சபீரை நேற்றும் இன்றும் ட்ரெண்ட் செய்தனர். இதனால் #OneMoreQuestionShabbir என்ற ஹேஷ்டேக் நேற்று இன்றும் சென்னை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. இதையடுத்து செய்தியாளர் சபீர் இந்த கண்டனங்கள் குறித்து கருத்து பதிவிட்டவர், ``மதிப்பிற்குரிய ஐயாக்கள்..... கேள்விக் கேட்ட ஒரே காரணத்திற்காக தமிழகம் மட்டும்மல்லாது அகில உலகளவில் பெருமை தேடித்தந்தமைக்கு கார் உள்ளவும்... கடல் நீர் உள்ளவும்... பார் உள்ளவும்... பயிந்தமிழ் உள்ளவும் நன்றிகள் பல..... இப்படிக்கு #OneMoreQuestionShabbir" என்று கலாய்த்துள்ளார்.