யாருக்கெல்லாம் தமிழக அரசின் ௹.2000 சிறப்புத் தொகுப்பு...? தண்டோரா போட்டு அவசர அவசரமாக மனு வாங்கும் தமிழக அரசு!

tn govts rs.2000 special package, doubts on beneficiaries

by Nagaraj, Mar 2, 2019, 10:02 AM IST

தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் சிறப்புத் தொகுப்பு தொகையை மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏழைகள் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படும் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதால், கிராமங்கள் தோறும் தண்டோரா போட்டு அவசர, அவசரமாக மனு பெறப்படுகிறது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ௹.2000 சிறப்புத் தொகை வழங்கப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்துவதில் ஏகக் குளறுபடிகள் அரங்கேறின. முதலில் ஒரு பக்க விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு கணக்கெடுப்பு நடந்தது. எங்களுக்கெல்லாம் இல்லையா? என ஒட்டு மொத்த ரேசன் கார்டுதாரர்களும் ரூ 2000 பணத்தை எதிர்பார்த்து பல இடங்களில் பிரச்னை செய்தனர்.

தேர்தல் நேரத்தில் ஏன் வம்பு என்று யோசித்த ஆளும் கட்சி அமைச்சர்கள், அனைவரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று பணத்தை வழங்கி விட வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் போன்றோர் ரூ.2000 அனைவருக்கும் வழங்கப்படும் என பகிரங்கமாக கட்சி மேடைகளிலேயே அறிவித்தனர்.

இதனால் புதிதாக 4 பக்கத்தில் விண்ணப்பம் வழங்கி மீண்டும் கணக்கெடுப்பு ஜரூராக நடைபெற்று வருகிறது. வசதி படைத்தவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்களில் கடந்த சில நாட்களாக மனு கொடுக்க கூட்டம் அலைமோதுகிறது.

மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு சில ஒரு வாரத்திற்குள் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன் ரூ 2000 பணத்தை தமிழக மக்களிடம் சேர்த்து விட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்றைக்குள் விண்ணப்பம் வாங்கும் பணியை முடித்து திங்கட்கிழமை அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்ற தகவலுடன் கிராமங்கள் தோறும் தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.

You'r reading யாருக்கெல்லாம் தமிழக அரசின் ௹.2000 சிறப்புத் தொகுப்பு...? தண்டோரா போட்டு அவசர அவசரமாக மனு வாங்கும் தமிழக அரசு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை