தேமுதிக கூட்டணியால் அதிமுகவுக்கு கூடுதலாக கிடைக்கப் போவது 500, 1000 ஓட்டுக்கள் தான் என்றாலும் அக்கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? சேராதா? என்ற இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக தரப்பில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை கூறி வருகின்றனர். அதிமுக எம்பிக்கள் 37 பேரால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று பிரேமலதா கூறிய கருத்துக்கும் அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தேமுதிகவை மட்டம் தட்டிப் பேசிவிட்டு அந்தக் கட்சியுடன் கூட்டணியும் வைக்க விரும்புவதாகவும் கூறி சர்ச்சையைக் கூட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்னிலையில் விஜயகாந்த் நாக்கைத் துருத்தி நாகரீகம் இல்லாமல் நாக்கைத் துருத்தி பேசியது முதலே தேமுதிக வீழ்ச்சியடைந்து விட்டது.
கூட்டணிக்காக இரு பக்கமும் தேமுதிக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது தவறு என்று கனகராஜ் கூறினார்.
தேமுதிக கூட்டணிக்கு வந்தால் கிடைக்கப் போவது என்னவோ கூடுதலாக 500, 1000 ஓட்டுக்கள் தான். மதிமுகவால் திமுக கூட்டணிக்கு 500 ஒட்டுக்கள் கூடுதலாக கிடைக்கும் என்று தெரிந்தும் அக்கட்சிக்கு இடம் ஒதுக்கியுள்ளனர். அதுபோல் தேமுதிக எங்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பதும் நல்லது தானே என்று கனகராஜ் எம்எல்ஏ கூறினார்