தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் அறிவித்தார். அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தே ஏப்ரல் 18-ந் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும் சத்ய பிரத சாகு அறிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் பதவி பறிக்கப்பட்டதாலும், திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மறைவாலும், ஓசூரில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி வழக்கு ஒன்றில் சிறைத் தண்டனை பெற்றதாலும் மொத்தம் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது