தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடியும் வரை அச்சடிக்கப்பட்ட புதிய குடும்ப அட்டைகளை வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான நேற்று மாலை முதலே, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன.
இதையடுத்து, அரசு கட்டடங்களில் கட்சித் தலைவர்களின் படங்களை அகற்றுதல், கட்சி விளம்பரங்களை அளித்தல், வாகனச் சோதனை போன்ற தேர்தல் கால பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அவ்வகையில், உணவுபொருள் வழங்கல் துறையும், தேர்தல் நடத்தை விதிகளை சுட்டிக்காட்டி, தேர்தல் முடியும் வரை அச்சடிக்கப்பட்ட புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.
எனினும், ஆன்லைன் மூலம் பெறப்படும் புதிய குடும்ப அட்டை மனுக்களை பரிசீலிக்கலாம்; ஆனால், அது தொடர்பாக உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், திருத்தம் செய்வதையும் தவிர்க்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அது அறிவுறுத்தியுள்ளது. மேலும், நியாயவிலைக்கடைகளில் அரசியல் பிரமுகர்களின் படங்கள், சுவரொட்டி, விளம்பர பலகைகளை இருந்தால், அவற்றை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.