தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் பாலியல் கொடூரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுப்புறப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்த விவகாரத்தில் தமிழகமே கொந்தளித்துள்ளது. பெண்களை மிரட்டி பாலியல் கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியான விவகாரத்தில் ஆளும் அதிமுக கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தக் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சந்தோஷ், சதீஷ் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக தமிழக அரசு மீதும், கோவை மாவட்ட காவல்துறை மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், போராட்டங்களும் வெடித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி, டி
.கே ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார். பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி தலைமையிலான சிபிசிஐடி குழு இந்த விசாரணையை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.