பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, திமுக எம்.பி. கனிமொழி, பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.
பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது; கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுன் என, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில், பொள்ளாச்சியில் இன்று போராட்டம் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.
அனுமதி வழங்கப்படாத நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி தேவை; குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மகளிர் ஆணையம் தலையிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இறுதியில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக, கனிமொழி உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.