ஒரே கல்லில் இரட்டை மாங்காய் - பாஜகவில் இணைந்து தேர்தலில் களமிறங்குகிறாரா கெளதம் கம்பீர்?

Gautam Gambhir May Be BJP Candidate From New Delhi

by Sasitharan, Mar 12, 2019, 19:04 PM IST

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். மேலும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். இதேபோல் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களுக்காக அறக்கட்டளை ஒன்றை திறக்கவுள்ளார். ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து சமூக நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். அதனொருபகுதியாக சமீபத்தில் அரசியல் அரங்கிலும் அவர் குரல் கேட்க ஆரம்பித்தது. குறிப்பாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அந்தக் கட்சி சமீபத்தில் நாளிதழ்களில் அளித்த விளம்பரம் குறித்து அவர் காட்டமாக விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கம்பீர் பாஜகவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பாஜக மீது கம்பீருக்கு எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக கம்பீர் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் அவரை கட்சியில் இணைத்தால் இளைஞர்களை விரைவாக ஈர்க்கலாம் என பாஜக திட்டமிட்டு வருகிறது. போதாக்குறைக்கு டெல்லியில் வலுவாக இருக்கும் ஆம் ஆத்மியை எதிர்த்து வருவதால் அவரை கட்சியில் இணைத்து ஒரு கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கலாம் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

டெல்லியில் இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்தமுறையை போலவே, மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது. இதனால் 7 தொகுதகளிலும் வலிமையான வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி திட்டமிடுகிறது. அதன் ஒருபகுதியாகவே கவுதம் கம்பீர் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில்தான் கம்பீருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

You'r reading ஒரே கல்லில் இரட்டை மாங்காய் - பாஜகவில் இணைந்து தேர்தலில் களமிறங்குகிறாரா கெளதம் கம்பீர்? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை