ஹார்ட் டிஸ்க் ஆதாரத்தை அழித்தாரா எஸ்பி! பொள்ளாச்சி சம்பவத்தில் திடுக்!!

பொள்ளாச்சி பாலியல் வக்கிர சம்பவத்தில் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, பார் நாகராஜ், சபரி உள்ளிட்டவர்களைக் காப்பாற்றுவதைவிடவும் ஆளும்கட்சி புள்ளிகளின் வாரிசுகளைக் காப்பாற்றுவதில்தான் அவர் அதிக அக்கறை செலுத்துவதாகச் சொல்கின்றனர். இதற்காகத்தான் அதிமுக எம்பி மகேந்திரன், எஸ்பி பாண்டியராஜனைப் பார்த்ததாகத் தகவல் வெளியானது.

இதைப் பற்றி பேட்டி கொடுத்த மகேந்திரனும், கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளும் கட்சியினர் செயல்படவில்லை. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். எஸ்பியை அவர் சந்தித்தபோது, அதிமுக முக்கியப் புள்ளியின் வாரிசும் உடன் இருந்துள்ளார்.

பாலியல் வீடியோ காட்சிகளில், தான் இடம்பெற்றுள்ள வீடியோக்கள் இருந்தால் அதை அழித்துவிடுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை முழுமையாக அழிக்கும் வேலைகளும் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலைச் சொல்கின்றனர்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை மட்டும் அல்லாமல், எஸ்பி பாண்டியராஜனையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். ஆளும்கட்சி மீது நம்பிக்கை இல்லாததால், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேநேரம் இந்த வீடியோ காட்சிகளில் உள்ள பணக்காரப் பெண்களிடம் பேரம் பேசும் வேலையையும் போலீஸ் தரப்பில் இருந்து செய்யத் தொடங்கிவிட்டார்களாம். இதில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் என இருவரது பெயர்கள் பரபரப்பாக அடிபடுகிறது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்