மதுரை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முடிந்தவரை பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், எத்தனையோ சுமைகளுக்கு மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து கட்டணத்தை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது.
பேருந்து கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு முடிந்தவரை பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது.
புதிய பேருந்துகளின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டண உயர்வால் தினசரி ரூ.8 கோடி வருவாய் வந்தாலும், ரூ.4 கோடி அளவுக்கு தினமும் வருவாய் இழப்பு ஏற்படும்.
திமுக ஆட்சியின்போது 112 சொத்துக்களை அடகு வைத்தனர். 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது ரூ.3,392 கோடி அளவுக்கு கடன் தொகை நிலுவையில் இருந்தது.
தற்போது, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.240.59 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.