அதிமுக தரப்பில் தம்மை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுமாறு அழைப்பு வந்ததாகவும், தாம் மறுத்துவிட்டதாகவும் டி.ராஜேந்தர் ஆச்சர்யமான ஒரு தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.
லட்சிய திமுக கட்சியை நடத்தி வரும் டி.ராஜேந்தர் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் களம் குதிக்கத் தயாராகி விட்டார். இன்று தன் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தலில் லட்சிய திமுக தனித்துப் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சித் தம்பிகள் விரும்புகிறார்கள். அதனால் தனித்துப் போட்டியிட முடிவெடுத்து விருப்ப மனு பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் தம்மை ஒரு கட்சித் தரப்பில் இருந்து தேர்தலில் போட்டியிடவும், பிரச்சாரம் செய்யவும் அழைப்பு வந்ததாக சூசகமாக டி.ஆர் கூற, எந்தக் கட்சி? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நான் சாணக்கியன், உண்மையைச் சொல்வதில் என்ன தயக்கம்? என்றபடி அதிமுக தரப்பிலிருந்து தான் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று அழைத்தார்கள். அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டேன். சரி ராஜ்யசபா எம்.பி. சீட் தருகிறோம்.. பிரச்சாரத்திற்கு வாருங்கள்... என்று கூறினார்கள் அதற்கும் மறுத்து விட்டேனாக்கும் என்று தன் பாணியில் டி.ராஜேந்தர் உண்மையைப் போட்டு உடைத்தார்.