காங்கிரஸ் மற்றும் பாஜகவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் இரு கட்சிகளின் முக்கியத் தலைகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரசில் 10 தொகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்டோர் மனு செய்துள்ளதால் வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் வரை பெரும் இழுபறி நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜகவிலும் இதே நிலைதானாம்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளும், பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக 20 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
திமுக கூட்டணியில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவையும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
காங்கிரசில் இப்போது தான் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை முடிவு செய்வது டெல்லி தான் என்பதால் போட்டியிட விரும்புபவர்கள் டெல்லியில் முகாமிடத் தொடங்கி விட்டனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 20, 30 பேர் என விருப்ப மனு கொடுத்துள்ளதுடன், டெல்லியில் தங்கள் ஆதரவு மேலிடத் தலைவர்கள் மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் காங்கிரசில் வேட்பாளர் பட்டியல் வெளியாவது கடைசி நிமிடம் வரை போராட்டமாகத்தான் இருக்கப் போகிறது என்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுள்ள பாஜகவிலும் இதே நிலைமை தான் என்கின்றனர். குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், கோவையில் சி.பி. ராதா கிருஷ்ணன் ஆகியோர் தான் வேட்பாளர்கள் என்று கூறப்பட்டாலும் அங்கும் சீட் கேட்டு பாஜக புள்ளிகள் டெல்லியில் முட்டி மோதி வருவதால் பட்டியல் இறுதி செய்வது காலதாமதமாகும் என்றே தெரிகிறது.