திருவாரூர்: ஸ்மார்ட் கார்டு இருந்தால்தான் ரேஷன் பொருட்கள் என்று கூறி வந்த நிலையில், தற்போது ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்ள’ எழுந்தன. இதையடுத்து, இதுபோன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கி வருகிறது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என தமிழக அரசு கூறியது.
தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் விண்ணப்பித்தும் ஸ்மார்ட் கார்டுகள் கிடைக்காமலும் உள்ளன.
இந்நிலையில், திருவாரூரில் நேற்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வருகை தந்தார். அப்போது, குழந்தைகளுக்கு சொட்டு மருந்த வழங்கிய அமைச்சர் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் அமைச்சரிடம் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் பெற்று கொள்ளலாம். இருப்பினும், வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் ” என்றார்.