மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆஸ்தான தொகுதியான கன்னியாகுமாரியில் நாடாளுமன்ற வேட்பாளராக இந்த முறையும் களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து வந்து தன் தொகுதி பிரச்சார களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். விரைவில் பிரதமர் மோடி கன்னியாகுமரி பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என பாஜக தரப்பில் பேசப்படுகிறது. தான் செய்த நலத்திட்டங்களால் இந்த முறை எப்படியும் வெற்றிபெற்று விட வேண்டும் என முனைப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பிரச்சாரத்திற்காக நேற்று காலை தனது வீட்டிலிருந்து காரில் வில்லுக்குறி பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வில்லுக்குறி சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மத்திய அமைச்சர் பிரச்சாரத்திற்கு வருவதை அறிந்த அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அவரிடம் பிரச்சார வாகனத்துக்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட வாங்கிய சோதனை செய்த அதிகாரிகள், காரின் டிக்கி, மற்றொரு காரையும் சோதனை செய்தனர். மத்திய அமைச்சர் என்றுகூட பாராமல் அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை 15 நிமிடம் நீட்டித்தது. சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.