இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று பிறந்தநாள்!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் 46வது பிறந்த தினம் இன்று.

நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என பல பரிமாணங்களில் இந்திய ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள வசீகர மனிதன் பிரபுதேவா.

பிரபல நடன இயக்குநர் சுந்தரத்தின் மகனாக ஏப்ரல் 3,1973-ம் ஆண்டு பிறந்தார் பிரபுதேவா. இவரது அண்ணன் ராஜூ சுந்தரம் மற்றும் தம்பி நாகேந்திர பிரசாத் என இந்த மூன்று சகோதரர்களும் நடன கலையில் தங்களது தனித் திறமைகளை நிரூபித்துள்ளனர்.

இதயம், வால்டர் வெற்றிவேல், அக்னி நட்சத்திரம், சூரியன், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் வரும் பாடல்களில் நடனமாடி அசத்திய பிரபுதேவா, 1989-ம் ஆண்டு வெளியான இந்து படத்தின் மூலம் முழு கதாநாயகனாக மாறினார்.

இவர், நடிப்பில் வெளியான காதலன், லவ் பேர்ட்ஸ், நெஞ்சிருக்கும் வரை, மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா. மனதை திருடிவிட்டாய், மின்சார கனவு போன்ற பல படங்கள் இன்றளவும் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் உள்ளதற்கு, பிரபுதேவாவின் குறும்புத் தனமான நடிப்பும் சுறு சுறுப்பான நடனமும் தான் காரணம்.

மின்சாரக் கனவு படத்திற்கு இவர் நடனம் அமைத்து கஜோலுடன் நடனமாடிய வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்காக தேசிய விருதையும் பிரபுதேவா வென்றார்.

நடிப்பது மட்டுமல்லாமல், விஜய்யின் போக்கிரி, வில்லு படங்களை தமிழில் இயக்கி இயக்குநராகவும் உயர்ந்தார். மேலும், பாலிவுட்டில் போக்கிரி படத்தை வான்டட் என ரீமேக் செய்து சல்மான் கானை நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தமிழில் தேவி, சார்லி சாப்ளின் 2, பொன்மாணிக்கவேல், தேவி 2 என வரிசைக் கட்டி நடித்து வரும் பிரபுதேவாவுக்கு அண்மையில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்தியில் சல்மான் கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கும் பிரபுதேவா, தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசை நேற்றே கொடுத்துவிட்டார்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்