எந்த விதத்திலும் பாஜகவிடம் இருந்து பிரிக்க முடியாது. உயிர் பிரிந்தால் ஒழிய பாஜகவிடம் இருந்து பிரிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கட்சியில் நடைபெறும் பூசல்களை அடுத்து, பாரதிய ஜனதா கட்சியை விட்டு தமிழிசை சவுந்தரராஜன் விலகப்போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இவை அவதூறானவை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன், “இறுதி மூச்சு உள்ளவரை பாஜகவிற்காக பணியாற்றுவேன். கட்சியை விட்டு விலகுவதாக வரும் தகவல் அவதூறானது. தமிழிசையை எந்த விதத்திலும் பாஜகவிடம் இருந்து பிரிக்க முடியாது. உயிர் பிரிந்தால் ஒழிய பாஜகவிடம் இருந்து பிரிக்க முடியாது.
எனது வாழ்க்கையின் குறிக்கோளே தமிழகத்தில் தாமரையை அரியணை ஏற்ற வேண்டும் என்பது தான். தமிழகத்தில் பாஜக காலூன்றி விடப்போகிறதே என்றுதான் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், “திராவிடமும் தேசியமும் வேறு அல்ல; ஒன்றுதான். தேசிய உணர்வோடு கூடிய தமிழக அக்கறை, தமிழக உணர்வுடன் கூடிய தேசிய அக்கறை இருந்தால்தான் நேர்மறையான அரசியலை கொண்டு வர முடியும். தேசியமும், மாநிலமும் ஒன்றாக சிந்தித்தால் மோதல் வராது” என்று கூறினார்.