திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ.வுடன் வாடகை பணம் தொடர்பாக தகராறில் ஈடுபட்ட வாலிபர் வசந்தாமணி, மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசிங் தெருவை சேர்ந்தவர் வசந்தாமணி என்கிற மணிகண்டன் (41). மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளி. பொது நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் சேர் போடும் தொழில் செய்து வந்தார். போளூர் ரயில் நிலைய சாலையில் சி.டி. வாடகைக்கு விடும் கடை வைத்திருந்தார்.
கலசப்பாக்கம் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு சேர், பந்தல் போன்றவற்றை சப்ளை செய்துள்ளார் வசந்தாமணி. இதற்கான வாடகை பணத்தை பலமுறை கேட்டும் தரவில்லை என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கடந்த 21ஆம் தேதி போளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்திடம் பணம் கேட்டுள்ளார் வசந்தாமணி. இதையடுத்து, எம்.எல்.ஏ.வை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் வசந்தா மணி.
எம்.எல்.ஏ. பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும், தன்னை தாக்கியதாக வசந்தாமணி தரப்பும் புகார் கொடுத்திருந்தது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 4 நாட்களில் திடீரென வசந்தாமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டு, கடந்த 24 ஆம் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வசந்தாமணியின் வழக்கறிஞரும், உறவினர்களும் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகு மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கியுள்ளனர். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் நேற்று புதன்கிழமை திடீரென அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
எம்.எல்.ஏ. தனது ஆட்களை வைத்து தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதை போலீசார் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வசந்தாமணியின் உறவினர்களும், ஆதரவாளர்களும், போளூர் பேருந்து நிலையத்தில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வசந்தாமணியின் மனைவி சுனிதா கூறுகையில்,“ எம்.எல்.ஏ.விடம் பணம் வாங்கச்சென்ற எனது கணவரை பொய் புகாரின் பேரில் கைது செய்துசிறையில் அடைத்து, கொன்று விட்டனர். அவரது சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.