பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர்கள் விடுதலை ஆன பாடில்லை. அவர்களை விடுவிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார். அவர் ஒரு கையெழுத்திட்டால் போதும் விடுதலை ஆகிவிடுவார்கள். தமிழகம் முழுவதும் அவர்கள் விடுதலைக்கு ஆதரவு பெருகி இருக்க ஆளுநர் எந்த பதிலையும் சொல்லலாம் ஆறு மாதங்களுக்கு மேலாக மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ``விடுதலையை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும்" எனக் கூறியிருந்தார். இதற்கு பேரறிவாளன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சிதம்பரத்துக்கு இது தொடர்பாக ஐந்து கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அதில்,
1. அரசியல் சாசனம் உறுப்பு 161ன்படி பேரறிவாளன் அளித்த கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 161ன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை மற்றும் ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க அதிகாரம் உண்டா? இல்லையா?
2. தண்டனை தருவது மட்டுமே நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது தண்டனை குறைப்பு, கழிவு, நிறுத்தி வைப்பு மற்றும் மன்னிப்பளிக்கும் அதிகாரம் அரசுகளுக்கு உட்பட்ட அதிகாரம் என்று சட்டம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த உங்களுக்கு தெரியாதா?
3. பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்ய தவறு விட்டேன். தனக்கு ராஜீவ் கொலை குறித்து முன்கூட்டியே தெரியாது என்று அவர் சொன்ன உயிரான வரிகளை பதிவு செய்ய தவறிவிட்டேன் எனச்சொல்லி அதனை பதிவு செய்த ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார் என்பதை அறிவீர்களா?
4. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச சதி குறித்து நீதிபதி ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை குழு 1999 முதல் 20 ஆண்டுகளாக விசாரணை செய்து வருவதும் அந்த விசாரணை குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பேரறிவாளன்தான் வழக்கு போட்டு அது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்பது தெரியுமா? அந்த விசாரணை குறித்து நீங்களும் உங்கள் காங்கிரஸ் அரசும் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?
5. எழுவர் விடுதலை குறித்த மாநில அமைச்சரவை பரிந்துரையை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அல்லது மாநில அமைச்சரவைக்கு அந்த அதிகாரமே இல்லை என்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.