மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், விடுதலை கிடைக்க தாமதமாகி வருகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மகள் திருமணம் நடக்க இருப்பதால் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நளினி.
அந்த மனுவில், ‘லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும். அதோடு, வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும்' என்றும் நளினி கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே, மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் நளினி. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
மு.க. ஸ்டாலின் எங்கள இன்னும் நல்லா திட்டினா நல்லதுதான்- ராமதாஸ் சொல்லும் புதுதகவல்!