‘இந்தியாவில் நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை’ எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, இரு தினங்களுக்கு முன்பு பாஜக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 12 பேர் கொண்ட குழு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அதில், ‘மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவுத்திட்டமான நதிகள் இணைக்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்’ என்ற முக்கிய அம்சம் இடம் பெற்றது.
இதையடுத்து, ‘நாட்டில் உள்ள நதிகளை இணைக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற பாஜக தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கோரிக்கை, இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் நான் பேசியிருக்கிறேன்’ என நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஆதரித்துப் நேற்று பேசினார்.
இந்நிலையில், ‘இந்தியாவில் நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை’ எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிருபர்களுடன் அவர் பேசியதாவது, ‘வாக்கு சேகரிப்பின் போது, வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதைத் தடுக்க வேண்டும். தேனியில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் நடந்து வருகிறது. அதனால், தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றவர், ‘பல மாநிலங்களில் உள்ள நதிகள் இணைப்பது சாத்தியம் இல்லை. பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய்யானது’ என பாஜக தேர்தல் அறிக்கையை விமர்சித்துப் பேசினார்.