ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஓபிஎஸ் ஆஜரானால் மட்டுமே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விசாரணை நடத்த, மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதனை காரணம் காட்டி அப்போலோ மருத்துவர்கள் இன்று ஆஜராகவில்லை. வரும் 25ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்பை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் மருத்துவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி கூறினார்.
இது குறித்து பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ‘ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களை விட்டுவிட்டு ஓ.பன்னீர்செல்வத்தையும் விஜயபாஸ்கரையும் விசாரித்தால் உண்மை வெளிவரும்' என்றார். 'ஜெயலலிதா மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழும்' எனவும் தெரிவித்தார்.