ஓட்டுக்கு முன்னூறு ரூபாயாம்? அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க. மும்முரம்!

Tamilnadu political parties engaged in money distribution to voters

by எஸ். எம். கணபதி, Apr 13, 2019, 08:31 AM IST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எந்தக் கட்சிக்காரர்கள் எவ்வளவு கொடுப்பார்கள் என்று வாக்காளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. என்னதான், தேர்தல் ஆணையம் பல லட்சங்களை செலவழித்து ‘‘வாக்குகளை விலைக்கு விற்காதீர்கள்’’ என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும், அப்படி செலவழித்த பணமும் வீணாகப் போகிறதே தவிர பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கு காரணம், தேர்தல் ஆணையம் எப்பவுமே ஆளும்கட்சிக்கு சாதகமாக இருப்பது அல்லது ஆளும்கட்சியை கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருப்பதுதான். இதனால், அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, தி.மு.க.வாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சியாக இருக்கும் போது பணத்தை வாரி இறைக்கிறார்கள், அதுவும் பணத்தை வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் புதுப்புது டெக்னிக்குகளையும் கண்டுபிடிக்கிறார்கள். ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி. தினகரன் யாரும் எதிர்பாராத விதமாக இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பணம் கொடுப்பவர்களை பிடித்தாலும் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுப்பதுடன் சரி, தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், அரசியல்வாதிகளுக்கு பயம் இருப்பதில்லை.

தற்போதும் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் திட்டமிட்டிருக்கின்றன. இதில்தான், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடந்த ரெய்டில் 11 கோடி ரூபாய் வரை சிக்கியது.
இந்நிலையில், அ.தி.மு.க. தரப்பி்ல் எல்லா தொகுதியிலும் ஓட்டுக்கு தலா 300 ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டு, பணப்பட்டுவாடா நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி விட்டதாக பேசப்படுகிறது. கட்சியின் சார்பில் 250 ரூபாயாம். வேட்பாளரின் சார்பில் 50 ரூபாயாம். ஒவ்வொரு தொகுதியிலும் 6 லட்சம் பேர் என்று கணக்கிட்டு, தொகுதிக்கு 18 கோடி ரூபாய் பட்டுவாடா ஆகி விட்டதாக ஆளும்கட்சித் தரப்பில் பேசப்படுகிறது.

வேலூர், தேனி போன்ற பணக்கார வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஓட்டுக்கு வேட்பாளர்களின் சார்பில் தனியாக ஆயிரக்கணக்கில் கொடுக்கப்படுகிறதாம். அதே போல், சேலை, குடம் என்றும் சில இடங்களில் தருகிறார்களாம்.

அ.தி.மு.க.வின் கடைசி நேர விநியோகத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள தி.மு.க. அதற்காக இரவு பகலாக கண்காணிப்பு வேலையில் இறங்கியு்ள்ளதாம். மேலும், தி.மு.க.வினரும் தொகுதிக்கு ஒரு லட்சம் பேருக்காவது தலா 200 ரூபாய் தருவது என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.

டி.டி.வி.தினகரனின் வேட்பாளர்களுக்கு இது வரை கட்சியில் இருந்து பெரிதாக எதையும் கொடுக்கவில்லையாம். ஆனாலும், வாக்காளர்களுக்கு எப்படியும் ஏதாவது ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி, பணம் கொடுக்க தினகரன் ஏற்பாடு செய்வார் என்று அக்கட்சிக்காரர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, தினகரன் கட்சியினர் பணம் கொடுக்காமல் தடுக்கவும் அ.தி.மு.க. தரப்பி்ல் முயற்சிக்கப்படுகிறதாம்.

இந்த சூழ்நிலையில், இன்னும் 2 நாட்களில் எங்கும் பணப்பட்டுவாடா பேச்சுதான் பலமாக எழப் போகிறது. புதிதாக தேர்தல் பணிக்காக பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவும், தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூவும் எப்படி பணப்பட்டுவாடாவை தடுக்கப் போகிறார்கள்? ஏதாவது புதிய வியூகம் அமைத்திருக்கிறார்களா? அல்லது வழக்கம் போல் எல்லாம் முடிந்த பிறகு, ‘‘நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்று சப்பைக்கட்டு கட்டுவார்களா? பார்க்கலாம் காத்திருந்து!!

You'r reading ஓட்டுக்கு முன்னூறு ரூபாயாம்? அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க. மும்முரம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை