2 ஆயிரம் அல்ல 2 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க ஆனா ஓட்டு மட்டும் தி.மு.க.வுக்கு போடுங்க என வாக்காளர்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மாம்பாக்கத்தில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் நீட் தேர்வு கூடாது என கூறுகின்றன. ஆனால் தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலும், நிதின் கட்கரியும் நீட் தேர்வு உறுதியாக நடக்கும் என்று கூறுகின்றனர். எட்டு வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என நிதின் கட்கரி சொன்னார்.
இதற்கு பா.ம.க.வின் பதில் என்ன? ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா?.2 ஆயிரம் அல்ல 2 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கோங்க ஆனா ஓட்டு மட்டும் தி.மு.க.வுக்கு போடுங்க. இவ்வாறு அவர் கூறினார்.