வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்தது சரிதான்- ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது சரிதான் என்று கூறி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தரப்பில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக காரணம் காட்டி, அத் தொகுதியில் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டது தேர்தல் ஆணையம் . ரத்து செய்வதற்கு முன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வேலூர் தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்தும், உடனே தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கக் கோரி மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது ஏ.சி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளர் மீதோ, அவர் சார்ந்த கட்சி மீதோ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலையே ரத்து செய்யும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டப்படி குடியரசுத் தலைவருக்கு கிடையாது. தேர்தலை ரத்து செய்வதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், அப்படியெனில் பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர் தேர்தலில் நிற்கலாம் என்கிறீர்களா? என கேட்டனர். சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஏ.சி.சண்முகம் தரப்பில் கூற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத் தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பணப்பட்டுவாடா நடப்பதற்கான ஆதாரங்களுடன் வருமான வரித்துறை கொடுத்த அறிக்கைப்படியும், தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பிலும் நியாயப் படுத்தப்பட்டது. சுயேட்சை வேட்பாளர் முருகுமாறன் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதனால் இந்த வழக்கில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. பின்னர், இந்த வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சற்று நேரத்துக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது சரிதான் என்று கூறி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை. ஆகையால் நாளை வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் உறுதியாக நடைபெறாது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News