உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன்.
91 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் 67,820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,293 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களுடன் நட்சத்திர பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.
அதன் வகையில், தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனும் வாக்களித்தார். மயிலாப்பூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வீல் சேரில் வந்து வாக்களித்தார் அன்பழகன். உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தனது கடமையை ஆற்றிய அன்பழகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.