திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
தமிழகத்தில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மிகவும் பிசியான சாலையாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. பொதுவாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாரத்தின் இறுதிநாட்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மக்களை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த லட்சக்கணக்கான பேர் மீண்டும் பணிக்காக சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தின் தென்நகரங்களிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் உளுந்தூர் பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ஒரு மேம்பாலத்தில் அடுத்தடுத்து தனியார் ஆம்னி பேருந்துகள் எதிர்பாரத விதமாக மோதின. இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பாலத்தில் விபத்து நடந்துள்ளதால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து முடங்கியது.
போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காலையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பயணிகள் விபத்தால் ஏற்பட்ட வாகன நெரிசலால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.