ராசிபுரம் குழந்கைள் விற்பனை விவகாரத்தில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளியின் தோழியான நர்ஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி (வயது 50) தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், பல ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற அமுதவள்ளியையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் இருவரை போலீஸ் கைது செய்துள்ளனர். கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் என்பவரையும், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் பர்வின்னையும் போலீஸ் கைது செய்தது.
பர்வீன் வாயிலாக அமுதவள்ளி குழந்தைகளை விற்பனை செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. விசாரணை முழுமையாக முடிவடைந்தபிறகே அவர்கள் இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். இதற்கு யார் எல்லாம் உடந்தை என்ற தகவல் வெளியாகும்.