18 வயது பெண் மைனரா? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Age of consent should be lowered to 16, observes Madras High Court

by எஸ். எம். கணபதி, Apr 27, 2019, 10:09 AM IST

பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளதாக கூறி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் கோர்ட்டு, அந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த வாலிபர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:
வாலிபர் மீதான குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்பதால், அவரை விடுதலை செய்கிறேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின்(போக்சோ) பிரிவு 2(டி)-ன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை மைனராக வரையறை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன், அவரது விருப்பத்துக்கு உட்பட்டு, உறவு கொண்டாலும், அவ்வாறு உறவு கொண்டது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் என்று கூறி, அந்த ஆண் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

போக்சோ சட்டப்பிரிவின் கீழ் தண்டனை நிரூபிக்கப்படும்போது, குறைந்தது 7 அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. பொதுவாக 17 வயதில் பள்ளி இறுதி ஆண்டு படிப்போ அல்லது கல்லூரியில் முதல் ஆண்டு படிப்பிலோ அந்த பெண் இருப்பார். அதனால், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கும், ஆணுக்கும் விருப்பப்பட்டு ஏற்பட்ட உறவை வரையறை செய்யவேண்டியிருக்கிறது.

அதனால், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் காதல் திருமணம், உடல் ரீதியான உணர்வுகளினால், அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் ஏற்படும் உறவு இயற்கைக்கு எதிரானதாக கருத முடியாது. எனவே, அது போன்ற உறவுக்காக அந்த ஆண் தண்டிக்கப்படுவதை ஏற்க முடியாது. அதனால், போக்சோ சட்டப்பிரிவு 2(டி)ல் நிர்ணயிக்கப்பட்ட 18 வயது என்பதை 16 வயதாக குறைக்கவும், இதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரி கைது

You'r reading 18 வயது பெண் மைனரா? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை