கட்சிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதாக எழுந்த புகாருக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பதிலளித்துள்ளார்.
காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில், 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் வரும் மே 23ம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், அதிமுக கொள்கைக்கு விரோதமாகக் கட்சிக்கு எதிராக அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் செயல்படுவதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் சமர்பித்து நேற்று புகார் மனு அளித்தார். அதோடு, அவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து, எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறின. தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, ‘அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் நாங்கள் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் காட்டி, புகார் அளித்துள்ளனர். அது தவறு என்கின்றனர். அப்படியானால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் காலில் விழுவது போன்ற புகைப்படங்களைக் காட்டி புகார் அளித்தால் முதல்வர் பதவியில் இருந்து அவர் இறக்கப்படுவாரா? அரசியல் பொது வாழ்க்கையில் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அதிமுக கொள்கைக்கும், கட்சிக்கும் விரோதமாக நாங்கள் செயல்படவில்லை. மேலும், டிடிவி தினகரனுடன் பழகக்கூடாது என்று சொல்வதற்கு உரிமையில்’ என்று தடாலடியாகப் பேசினார்.
முன்னதாக, 'சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால் அதற்கு விளக்கம் தருவோம்; சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும்' என்று எம்.எல்.ஏ பிரபு, எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் பதில் கூறியிருந்தனர்.
எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அதிமுக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஆட்சி தப்புமா...? கவிழுமா..? 3 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கப் பரிந்துரை சட்டப்பூர்வமானதா? என்ற விவாதங்கள் அனல் பறக்க நடந்து வருகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்....மே 23-க்குப் பிறகு தெரிய வரும்.