தாலி கட்டுவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து மணப்பெண் கதற துடித்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்தது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள வடக்கு குப்பளம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயி. இவருடைய இரண்டாவது மகன் வெங்கடேஷ் (26). பி.காம். பட்டதாரியான இவர், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான பி.காம். பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் ஞாயிறன்று காலை வள்ளியூரில் நடைபெற இருந்தது. முகூர்த்தம் காலை 9.30 மணிக்கு குறிக்கப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு மணப்பெண் திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், காலை 8.30 மணிக்கு மாப்பிள்ளை வெங்கடேஷ் வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால், பதில் எதுவும் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த ராதாபுரம் காவல்துறையினர் அவருடைய உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமண மண்டபத்தில் காத்திருந்த மணப்பெண் அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தார். இதனைக் கண்ட உறவினர்கள் கண்களும் கலங்கியது.