சுட்டெரிக்கும் அக்னி 4ம் தேதி தொடங்குகிறது! வடமாநிலங்களில் வீசும் அனல்!

Agni starts may 4, heat wave in northern states

by எஸ். எம். கணபதி, Apr 30, 2019, 08:30 AM IST

அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிகிறது. வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருப்பதால், பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் வழக்கமாக மே மாதம் தொடங்கும். முன்பெல்லாம் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகுதான் வெயில் அதிகமாக காணப்படும். ஆனால், இப்போது மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே வெயில் கொளுத்தி வருகிறது. வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் கடந்த 2 நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி விட்டது.

மேலும், ‘பானி’ புயல் காரணமாக சென்னை உள்பட வடமாவட்டங்களுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘பானி’ புயல், மே 1ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா கரைகளுக்கு 300 கி.மீ. தொலைவு வரை வந்து பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசினாலும், மழை பெய்யுமா என்பது சந்தேகம்தான் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் என்பதால், மக்கள் வெப்ப நோய்களுக்கு ஆட்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தினமும் வழக்கத்திற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பூசணிக்காய், சுரைக்காய் என்ற நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

வடமாநிலங்களில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஒடிசா மாநிலங்களில் பல நகரங்களில் வெயிலின் அளவு 42 டிகிரி செல்சியஸ் தாண்டி வி்ட்டது. குஜராத்தில் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, சூரத் போன்ற நகரங்களில் வெயிலின் அளவு 44 டிகிரியைத் தாண்டு என்பதால், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

மேலும், நகரங்களில் பல இடங்களில் குடிநீர் விநியோகம், வெப்பநோய்களுக்கான மருந்து விநியோகம், நிழல்கூரைகள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் லக்னோ போன்ற நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகளின் நேரம் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சட்டென்று மாறியது...! புயல் தமிழகத்தை நெருங்காதாம் மக்களே...!

You'r reading சுட்டெரிக்கும் அக்னி 4ம் தேதி தொடங்குகிறது! வடமாநிலங்களில் வீசும் அனல்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை