ஆளும் அதிமுக அரசு மீது அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்களும் கட்சிகளை மறந்து தமிழக ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் சட்டசபைக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கடந்த 2 நாட்களாக மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில், விவசாயிகள், பொதுநல சங்க நிர்வாகிகள் மற்றும் உப்பள தொழிலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை, உப்பள தொழிலாளர்களுக்கு இயற்றப்பட்ட சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும்.கட்சிகளை மறந்து இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களை விட, மக்களுக்கே அதிகம் உள்ளது. அதை விட அதிமுக அரசு மீது அக்கட்சியினரே கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.