உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் சபாநாயகரின் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சந்தேகம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு விடை கேட்டு சட்டப் பேரவை செயலாளரிடம் மனுவும் கொடுத்துள்ளார் பிரபு.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் கொடுத்த புகாரில் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சபாநாயகருக்கு எதிராக திமுக கொடுத்திருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காரணம் காட்டி ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதில் உச்ச நீதிமன்றமும் சபாநாயகருக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி விட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு குறித்து சபாநாயகர் தனபால் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.
இதனால் உச்ச நீதிமன்றம் செல்லாமல் சபாநாயகர் நோட்டீசுக்கு பதிலளிக்கப் போகிறேன் என்று கூறியிருந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு சந்தேகம் வந்து விட்டது. தான் சொன்னபடி சபாநாயகரிடம் விளக்கமளிக்க இன்று காலை கோட்டைக்கு வந்தார் பிரபு. ஆனால் சபாநாயகர் இல்லாததால் சட்டப்பேரவை செயலா ளர் சீனிவாசனிடம் சென்று ஒரு மனு அளித்தார். சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டுள்ளார். நோட்டீசுக்கு சபாநாயகரிடம் நேரில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறினால் அதற்கு அவகாசம் தேவை என்றும் மனுவில் கூறியுள்ளார்.