தனக்கு முதல்வர் ஆகும் ஆசையெல்லாம் கிடையாது என்றும் தனக்காக பதவிகளை தியாகம் செய்த 18 பேரில் ஒருவரைத்தான் முதல்வராக்குவேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் தனது மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ‘’கதிராமங்கலத்தில் போராட்டம் துவங்கியபோது எங்களிடம் ஆட்சியில்லை, எடப்பாடி வசம்போய்விட்டது. அரசுக்கு வருமானம் வருமானாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதை நிறுத்தி வெளியேறுவது தான் நியாயம்; அதுதான் மக்கள் ஆட்சி.
இந்த மண்ணும், காவிரியும், அதில் வரும் தண்ணீரும்தான் விவசாயிகளின் உயிர்நாடி. அதை அழித்துவிட்டு எதை கட்ட முனைகிறார்கள் என்பது புரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் இங்கிருந்து வெளியேற்றுவோம். இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம்.
தமிழகத்தில் தற்போது கமிசன் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. அந்த முகாமில் 6 பேரை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அந்த 6 பேரும் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனக்கு முதல்வர் ஆகும் ஆசையெல்லாம் கிடையாது. எனக்காக பதவிகளை தியாகம் செய்த 18 பேரில் ஒருவரைத்தான் முதல்வராக்குவேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆனையத்திடம் சசிகலாவின் வழக்கறிஞர் ஆஜராகுவார்‘’ என்றார்.