4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரச்சாரம் நாளை ஓய்வு...! பணப் பட்டுவாடா ஜரூர்

Assembly by-election, campaign ends tomorrow, cash for vote distribution is in full swing

by Nagaraj, May 16, 2019, 10:50 AM IST

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளும் பலமான வேட்பாளர்களை நிறுத்தி பலப்பரீட்சை நடத்துவதால் மும்முனைப் போட்டியில் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. 3 கட்சிகளுமே தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியுள்ளதால் இந்த தொகுதிகளில் உள்ளூர் ஆட்களை விட வெளியூர் நபர்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் இந்தத் தொகுதிகளில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் கடைசி நேரத்தில் பிரச்சாரக் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். 2 நாள் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு நேற்று முதல் களத்தில் இறங்கியுள்ள கமலுக்கு, எதிர்ப்புகள் ஒரு பக்கம் கிளம்புவதால் இன்றும், நாளையும் அவருடைய பிரச்சாரத்தில் பல்வேறு சர்ச்சைகளும், சுவாரஸ்யங்களும் எழலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 4 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக என 3 கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு ஓட்டுக்கு இவ்வளவு என பணப் பட்டுவாடாவிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தரப்பில் ஓட்டுக்கு ரூ 2 ஆயிரம், திமுக மற்றும் அமமுக தரப்பிலோ தலா ஆயிரம் என வாக்காளர்களை லிஸ்ட் போட்டு பகிரங்கமாகவே விநியோகித்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல், நீயும் கொடு.. நானும்... கொடுக்கிறேன், மக்கள் சந்தோசமாக இருக்கட்டும் என இந்த விஷயத்தில் 3 கட்சினருமே கூட்டணி அமைத்து பண விநியோகம் செய்கின்றனர். இதனால் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தேர்தல் பறக்கும் படையினர் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது..! கமல் பேச்சு குறித்து பிரதமர் மோடி கருத்து

You'r reading 4 தொகுதி இடைத்தேர்தல் ..! பிரச்சாரம் நாளை ஓய்வு...! பணப் பட்டுவாடா ஜரூர் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை