8 ஆண்டுகளாக வஞ்சிப்பதா..? ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க உடனடி நடவடிக்கை தேவை..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Take action to open Mettur dam on 12th June, mk Stalin urges TN govt

by Nagaraj, May 21, 2019, 10:51 AM IST

அதிமுக அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12-ந் தேதி திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து- அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி திமுக ஆட்சியில் பெறப்பட்ட 192 டி.எம்.சி காவிரி நீரை,177.25 டி.எம்.சி.யாக குறைப்பதற்குக் காரணமான அ.தி.மு.க அரசு, அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் கோட்டை விட்டது. பல்லும், ‘பவரும்’ இல்லாத வெறும் கூடு போன்றதொரு ஆணையத்தை அமைக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு அனுசரணையாக இருந்த அ.தி.மு.க அரசு, இன்றுவரை அந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ, டெல்டா விவசாயிகளின் உயிர் காக்கும் விவசாயத் தொழிலைக் காப்பாற்றிடும் நோக்கில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது மிகுந்த கவலைதரும் செய்தியாகும்.

உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதி வரைவுத்திட்டத்தின்படி, ஜூன் முதல் நாள் நீராண்டின் துவக்கம். ஜூன் மாதத்திலிருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லை. அதேபோல் அந்த அறிக்கையின் அடிப்படையில் ஜூன் முதல் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட வேண்டும். அக்கூட்டத்திற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. ஆகவே காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது.

மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே சென்று தரைதட்டி விட்டதாகச் செய்திகள் வருவதால்- கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலும், இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலும் தமிழகத்திற்கு நடுவர் மன்ற உத்தரவின்படி வர வேண்டிய காவிரி நீர் கிடைத்ததா? அதில் எவ்வளவு பற்றாக்குறை? அந்தப் பற்றாக்குறையைப் பெற அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவலும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி இதுவரை வெளியிடப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

ஆகவே, தன் கட்டுப்பாட்டிலேயே நீர் வளத்துறையையும் வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் இருந்துவிட்டார். அ.தி.மு.க அரசின் இந்தப் படு தோல்வியால் இந்த வருடம் மட்டுமின்றி- கடந்த எட்டு வருடங்களாகவே மேட்டூர் அணையை காவிரி நீர் பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி திறக்க முடியாத அவல நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் திசை திருப்பவும், விவசாயிகளை மேலும் மேலும் வாழ்வா-சாவா என்ற சோதனைக்கு ஆளாக்கி விளிம்பு நிலைக்குத் தள்ளவும், ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வு, விவசாய நிலங்கள் வழியாக கெயில் குழாய்கள் பதிப்பு என்று அ.தி.மு.க அரசும்- மத்திய பா.ஜ.க அரசும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு, டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிடவும், அங்கே தொடர் போராட்டச் சூழ்நிலையை ஏற்படுத்தி, பொது அமைதியைக் குலைத்திடத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே ஆழ்ந்த மெத்தனத்திலிருந்து அ.தி.மு.க அரசு தன்னை உடனடியாக விடுவித்துக் கொண்டு- விவசாயிகளின் இன்னல்களைப் போக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மண்டலத்தை காப்பாற்றிட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால், அ.தி.மு.க அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத் தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரச்சாரம் முடித்த கையுடன் கேதர்நாத்தில் மோடி வழிபாடு!

You'r reading 8 ஆண்டுகளாக வஞ்சிப்பதா..? ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க உடனடி நடவடிக்கை தேவை..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை