வட போச்சே...! ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் !

Election results, in 2014 what happened to Jayalalithaa,now same experience to mk stalin:

by Nagaraj, May 24, 2019, 12:32 PM IST

தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றும் டெல்லியில் கோலோச்ச முடியாமல் போய்விட்டது. 2014-ல் ஜெயலலிதாவும் இதே போல் வென்று குவித்து ஒரு பிரயோசனமில்லாமல் போனது .இப்போது அதே பரிதாப நிலைமை திமுகவுக்கு ஏற்பட்டது தான் வெற்றியிலும் ஏற்பட்ட சோகமாகி விட்டது.

கடந்த 2014 பொதுத்தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக எவ்வளவோ முயற்சித்தும் புறந்தள்ளி விட்டார் ஜெயலலிதா.தைரியமாக 40 இடங்களில் தனித்து களமிறங்கியது அதிமுக. மோடியா ?லேடியா ? என்ற முழக்கத்துடன் 40/40 வெற்றி என்ற நோக்கத்துடன் அதிமுக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது. அது மட்டுமின்றி நாட்டின் அடுத்த பிரதமர் ஜெய லலிதா தான் என்றும் தமிழக மக்களிடம் உரக்கக் குரல் கொடுத்தனர் அதிமுகவினர் . ஜெயலலிதாவின் எண்ணமோ, மத்தியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் தன்னை பிரதமராக்க , பாஜகவுக்கு எப்படியாவது நெருக்கடி கொடுத்து சாதித்து விடலாம் என்பது ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது. அது போல் தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு நல்ல பலனும் கிடைத்தது. 40-ல் 37 தொகுதிகளை அள்ளியது அதிமுக.

ஆனால் அதிமுகவின் இந்த வெற்றியால் ஜெயலலிதா போட்டிருந்த பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணத்திற்கு பிரயோசனமில்லாமல் போய்விட்டது.

இதற்குக் காரணம் தற்போது போலவே மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி விட்டது. பெரும் எம்.பி.படையுடன் டெல்லிக்குச் செல்லலாம். டெல்லி அரசியல் இனி தன்னைச் சுற்றித்தான் இருக்கும் என்றெல்லாம் திட்டம் வகுத்து டெல்லி செல்ல முன்னேற்பாடுகள் எல்லாம் செய்து வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்த்த ஜெயலலிதா விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

எப்போதும் தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் வீட்டின் பால்கனியில் நின்று புன்னகையுடன் இரு விரல்களை அசைத்து தொண்டர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது ஜெயலலிதாவின் வழக்கம். ஆனால் அன்றைய தினம் 37 தொகுதிகளில் அதிமுக வென்றும் ஜெயலலிதாவின் முகத்தில் உற்சாகமில்லை. மாறாக கோபத்தில் கொப்பளித்தாராம். பின்னர் ஜெயலலிதா சுக்கு டெல்லிப் பக்கம் வேலையே இல்லாமல் போய்விட்டது.

2014-ல் ஜெயலலிதாவுக்கு என்ன அனுபவம் நேரிட்டதோ அதே நிலைமை இப்போது திமுகவுக்கு ஏற்பட்டுவிட்டது. காங்கிரசுடன் பலமான கூட்டணி கண்ட திமுக, மத்தியில் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என்பதையும் முதன் முதலில் பிரகடனம் செய்தார் மு.க.ஸ்டாலின் .

எப்படியும் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துவிடும்.அமைச்சரவையில் திமுகவுக்கு வேண்டிய இலாகாக்களை நெருக்கடி கொடுத்து பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் மு.க.ஸ்டாலினும் மற்ற மேல் மட்ட தலைவர்களும் இருந்தனர். இதற்காக டெல்லியில் டேரா அடிக்க நட்சத்திர ஓட்டலில் அறைகளும் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.

ஆனால் தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திக்க, தமிழகத்தில் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றும் டெல்லியில் காய் நகர்த்தல் வேலைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

2014 தேர்தல் முடிவுகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்கு, அப்போது திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி தனது பாணியில், கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு கொடுத்து வைக்க வில்லை என்று கிண்டலாக அதிமுகவை விமர்சித்திருந்தார்.கருணாநிதி அன்று சொன்னது இன்று மு.க.ஸ்டாலினுக்கும் பொருந்தி விட்டது என்றே கூறலாம்.

You'r reading வட போச்சே...! ஜெயித்தும் பிரயோசனமில்லை... 2014-ல் ஜெயலலிதா... இன்று மு.க.ஸ்டாலின் ! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை