ஆர்.கே.நகரில் மாயவேலை செய்து வென்ற டி.டி.வி.தினகரனை இந்த தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, நாங்கள் கொடுத்த திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவே எடுத்து கொள்கிறோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மாயவேலை செய்து வெற்றி பெற்ற மேஜிக்மேன் என்று சொல்லப்படும் டிடிவி தினகரன் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
அவர் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் அவரை நிராகரித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க., எங்களிடம்தான் உள்ளது என்பதை தமிழக வாக்காளர்கள் நிரூபித்து விட்டார்கள். இனிமேல் அவரை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. செய்த தவறான பிரச்சாரம் தற்காலிகமாக எடுபட்டு விட்டது. ஆனால், 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாங்கள்தான் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் எப்போதும் வெளிநடப்புதான் செய்வார்கள். இப்போது தி.முக. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் அப்படி வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் சரி.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.