தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு திமுக, அதிமுகவில் யார் ? யாருக்கு? சீட் கிடைக்கும் என்ற விவாதங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளது. அதிமுக கூட்டணியில் போடப்பட்ட ஒப்பந்தப்படி பா.ம.க.வுக்கு ஒரு சீட் கிடைக்குமா? இல்லை 2009 -ல் ஜெயலலிதா கை விரித்தது போல் 'நோ' சொல்லி விடுவார்களா? என்ற கலக்கம் பா.ம.க தரப்புக்கு எழுந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த திமுகவைச் சேர்ந்த கனிமொழி, அதிமுகவில் மைத்ரேயன் உள்ளிட்ட 4 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் ஜீன் மாதம் இறுதி வாக்கில் இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள எம்எல் ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது. திமுகவில் கனிமொழி, மக்களவை எம்.பி.யாகி விட்டார். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டின் படி மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்குவது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள இரண்டில் ஒன்றை காங்கிரஸ் கேட்பதாக தகவல் .முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக ஒதுக்க திமுக தரப்பிலும் சம்மதித்து விட்டதாகத் தெரிகிறது. மீதமுள்ள ஒரே ஒரு எம்.பி. சீட், மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் அவருடைய மகன் உதயநிதி அல்லது மருமகன் சபரீசனுக்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்தில் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் இப்போது எம்.பி.யாக ஜெயித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதிமுக தரப்பில் 3 பேர் எம்.பி.யாகப் போவது யார்? என்ற விவாதம் தான் கட்சிக்குள் சூடான விவாதமாகியுள்ளது. அதுவும் பாமகவுடன் போட்ட ஒப்பந்தப்படி, அக்கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுக்கத்தான் வேண்டுமா? என்று யோசிக்கப்படுகிறதாம். ஏனெனில் மக்களவைத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில் ஒன்றில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை. பாமகவால் அதிமுகவுக்கும் ஆதாயமல்லாமல் போய்விட்டது. இதனால் ராஜ்யசபா சீட்டை பாமகவுக்கு சுளையாக கொடுப்பது வீண் என்று சில முக்கிய அதிமுக தலைவர்கள் விவாதம் செய்கிறார்களாம்.
இதற்கு உதாரணமாக 2009 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஜெயலலிதா கைவிரித்ததை குறிப்பிடுகிறார்களாம். அப்போதும் இப்போது போன்றே 7 + 1 என்ற கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. 7 தொகுதி களில் ஒன்றில் கூட பாமக வெற்றி பெறாமல் தோல்வி கண்டுவிட்டது. தோல்வியைக் காரணம் காட்டியே ராஜ்யசபா சீட் இல்லை என்று ஜெயலலிதா மறுத்து விட்டார். அதே போல் இப்போதும் பாமகவை கைகழுவி விடலாமே? என்கிறார்களாம். இதனால் தருமபுரியில் தோற்றாலும், ராஜ்யசபா எம்.பி.பதவி உறுதி என்ற மிதப்பில் இருந்த அன்புமணி ராமதாசும், பாமகவின் இதர தலைவர்களும் கலக்கத்தில் உள்ளதாக தகவல் .