ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர்?

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சுமார் 100 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் மிக நெருங்கிய உறவினர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

Feb 9, 2018, 11:04 AM IST

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சுமார் 100 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் மிக நெருங்கிய உறவினர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பி.செந்தில் & கோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மாநகராட்சியில் உள்ள வளர்ச்சிப்பணிகளுக்கான ஒப்பந்தம் பெரும் பகுதி இந்த நிறுவனத்தின் மூலமே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கோவை தெற்கு மண்டல பகுதிகளில் சுமார் ரூ.80 முதல் 100 கோடி வரையிலான 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டிருக்கிறது. சிமெண்ட் பயன்படுத்தி வேலை செய்யும் 90 சதவிகித வேலைகளும் இந்த ஒப்பந்ததாரருக்கே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

சிமெண்ட் பயன்படுத்தி வேலை செய்யும் போது 6 மூட்டை சிமெண்ட் போட வேண்டிய இடத்தில் அதிகபட்சமாக 4 மூட்டை சிமெண்டும், குறைந்தபட்சமாக 2 மூட்டை சிமெண்டும் போட்டு வேலையை முடித்து விடுவதாக கூறப்படுகிறது. மேலும், ஒப்பந்ததாரர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் அடாவடியாக அவர் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவிற்குள் இருக்கும் ஒரு பிரிவினர் - செந்தில் அன் கோ ஒப்பந்த பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி வந்திருக்கின்றனர். அதில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அதிகாரிகளுக்கும் சிக்கல் நேரிடும் என எச்சரித்திருக்கின்றனர்.

இதன் அடுத்த நடவடிக்கையாக, செந்தில் அன் கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்த பணிகள் குறித்த கோப்புகள் கோவை மாநகராட்சியில் இருந்து மாநகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையிலேயே மாநகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், செந்தில் அன்ட் கோ பேரில் ஒப்பந்ததாரர் ராஜா பார்த்துள்ள வேலைகளில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பொறியாளர் பிரிவு மற்றும் கணக்குகள் பிரிவில் இருந்து ஏராளமான கோப்புகள் சென்னையில் உள்ள நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவது உண்மை தான் என்று இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஊழல் குறித்த உண்மைகள் வெளிவருமா அல்லது மறைக்கப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்கிற ரீதியில் பதிலளித்துள்ளார்.

You'r reading ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை