ஜூன் 3 உடன்பிறப்பே... எழுந்து வா உடன்பிறப்பே.. கலைஞர் இல்லா முதல் பிறந்தநாள் விழா

Kalaigar Karunanidhis 96th birthday anniversary today: article

by Nagaraj, Jun 3, 2019, 08:54 AM IST

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர் .. 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 60 ஆண்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர்... என கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் கலைஞர் என்று தமிழக மக்களால் அன்புடன் உச்சரிக்கப்பட்டவர்.இன்று அவருடைய 96-வது பிறந்த தினம்.

ஓய்வறியா சூரியனாக ஓடி,ஓடி உழைத்த கலைஞர், கடந்தாண்டு தன் வழிகாட்டியாம் அண்ணாவின் காலடியில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். ஒவ்வொரு ஜூன் 3-ல் தன் பிறந்த நாளை தன் உடன்பிறப்புகளுடன் உற்சாகமாகக் கொண்டாடும் கலைஞர் இன்று இல்லை. கலைஞர் இல்லாமல் கொண்டாடப்படும் அவருடைய பிறந்த நாளை இன்று அவரின் உடன்பிறப்புகள் நீங்கா நினைவுகளுடன் இன்று உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முத்துவேல் கருணாநிதி, தற்போதைய நாகை மாவட்டத்தின் திருக்குவளையில் ஓர் எளிய குடும்பத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி இதே நாளில் பிறந்தார். 95 ஆண்டு கால தனது வாழ்க்கைச் சரித்திரத்தில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பல நூறு ஆண்டுகளுக்கு மறக்க முடியாத சாதனைகளைப் படைத்து, நீங்கா புகழுடன் கடந்த ஆண்டு வானில் விடை பெற்றுச் சென்ற சரித்திர நாயகனாம் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த சில, பல சம்பவங்களின் தொகுப்பு :

சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டு, 14 வயதிலேயே அரசியலில் கவனத்தைத் திருப்பினார்.
கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலத்தை நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.

17-வயதிலேயே தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் அமைப்பு, கையெழுத்துப் பத்திரிகை என தீவிரமாக பணியாற்றிய கருணாநிதி, பிற்காலத்தில் தன் தலைவனாகவும் தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராகவும் உருவெடுத்த சி.என். அண்ணாதுரையை 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.

1949-ல் பெரியாருடன் முரண்பட்டு அவரது பிறந்த நாளன்றே புதிதாக ஒரு கட்சியை அண்ணா துவங்கியபோது, அவருக்கு மிக நெருக்கமான துணையாகயிருந்தார் கருணாநிதி. 25 வயதே நிரம்பியிருந்த கருணாநிதி, கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் துவங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி, வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன. 1952-ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது.

1953-ல் அவரது முக்கிய முதல் போராட்டமாக, கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்து, மீண்டும் கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுக்க, தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி 6 மாதம் சிறை சென்றபோது, கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.

மலைக்கள்ளன், மனோகரா படங்களின் மூலம் திரையுலகிலும் கருணாநிதி உச்சத்திற்கு சென்றார்.

1957-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முதல் முறையாகப் போட்டியிட்டபோது, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி, 2016ல் திருவாரூர் தொகுதியில் வென்றதுவரை, தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றதில்லை.

1963-ல் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கருணாநிதி, 1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தபோது, அண்ணா, நெடுஞ்செழியன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், பொதுப் பணித்துறை - போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாக்கி, மூலை முடுக்கெல்லாம் பேருந்து வசதியை ஏற்படுத்தியது மிக முக்கியமான சாதனையாக அவருக்கு அமைந்தது.

ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969-ல் அண்ணா மறைந்த பின், புதிய முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

நில உச்சவரம்பு 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டு வந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, கை ரிக்சாவைத் தடைசெய்தது என தன்னுடைய 19 வருட ஆட்சியில், தமிழகத்தை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றியமைத்தார் கருணாநிதி.

கருணாநிதி தலைமையின் கீழ் கட்சி இரண்டு முறை மிகப் பெரிய பிளவைச் சந்தித்திருக்கிறது. 1972-ல் தி.மு.கவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்து, தனிக்கட்சி துவங்கி, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தார். இதற்குப் பிறகு 1993-ல் வைகோ தலைமையில் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. அப்போது பெரும் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள் தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றனர். இருந்தபோதும், இந்த பிளவுகளில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, அடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி.

1989-ல் தேசிய முன்னணி அரசில் பங்கேற்றதன் மூலம் தேசிய அரசியலில் தனது கணக்கைத் துவங்கிய கருணாநிதி, 1998லிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக திமுகவை வைத்திருந்தார். குறிப்பாக, 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றனர்.
ஆனால், இந்த காலக்கட்டத்தில் கருணாநிதி கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி,தமிழ் மக்களைக் காப்பாற்ற போதுமான அளவு எதிர்வினை ஆற்றவில்லையென்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1996-2001ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக்காலம், தி.மு.க. ஆட்சியின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக எப்படிப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல 2006-2011 ஆட்சிக் காலம் கருணாநிதி கடும் விமர்சனங்களுக்குள்ளான காலமாகவும் அமைந்தது. 2016-ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போனதற்கு, இந்த காலகட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே முக்கிய காரணமாக அமைந்தன.

அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947-ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011-ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத சாதனை இது. சினிமா தவிர, தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து இயங்கிவந்த கருணாநிதி, தன் உடல்நலம் குன்றும்வரை கலைஞர் டிவியில் வெளியான ராமானுஜம் தொடருக்கு வசனங்களை எழுதிவந்தார்.

எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் அவருடைய சாதனைகள், யார் ஒருவரையும் பொறாமையடையச் செய்யும். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கும் கருணாநிதி, தனது தொண்டர்களுக்கு எழுதிவந்த 'உடன்பிறப்பே' கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்று.

இந்திய விடுதலைக்கு முன்பாக அரசியல் வாழ்வைத் துவங்கிய தலைவர்களில் நீண்ட காலம் உயிரோடு இருந்த வர்கள் வெகு சிலரே. அந்த வகையில் 95 வாழ்ந்து கடந்தாண்டு மறைந்த கருணாநிதியின் மரணம், ஒரு யுகத்தின் முடிவைக் குறிக்கிறது. இன்று அவருடைய 96வது பிறந்த நாள். கலைஞர் உயிரோடு இல்லாமல் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாளை அவரின் நீங்கா நினைவுகளுடன் உடன்பிறப்புகள் ஒரு வித அமைதி கலந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடி வருகின்றனர்.

You'r reading ஜூன் 3 உடன்பிறப்பே... எழுந்து வா உடன்பிறப்பே.. கலைஞர் இல்லா முதல் பிறந்தநாள் விழா Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை