முன்னாள் முதல்வர், மறைந்த மு.கருணாநிதியின் 96 -வது பிறந்த நாளை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முத்தமிழ் அறிஞர், கலைஞர் என போற்றப்படும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 96-வது பிறந்த தினம் இன்றுகொண்டாடப்படுகிறது.கருணாநிதியின்மறைவுக்குப்பின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும். இதனால் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுகவினர் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதியின்பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியிலும் திமுக நிர்வாகிகளுடன் சென்று மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், திமுக தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளான இன்று, அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மாலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், கருணாநிதி பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.