தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட்டது. புதிய சீருடை அணிந்து மாணவ , மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்து வந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.
இதன் படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒரு சில மழலையர் பள்ளிகள் மட்டும் திறப்பு தேதியை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன. அரசுப் பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது. புதிய பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. நடப்பு ஆண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதில், 1, 6, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதால் பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடைந்ததும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பஸ் பாஸ்களையே மாணவர்கள் பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து பயணித்தாலே டிக்கெட் எடுக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.