பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் மாரடைப்பால் மரணம்

crazy mohan died in chennai private hospital

by எஸ். எம். கணபதி, Jun 10, 2019, 14:29 PM IST

பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று பிற்பகல் 2 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 67 சென்னையில் வசித்து வந்த கிரேஸி மோகனுக்கு இன்று காலை 11 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, மரணம் அடைந்தார்.

கிரேசி மோகன் கடந்த 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பயின்றவர். இவர், கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் போதே ‘கிரேட் பேங்க் ராபரி’ என்ற பெயரில் நாடகம் எழுதியவர்.

இதன்பின், கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகக் குழுவை துவக்கி நகைச்சுவை நாடகங்களை நடத்தி வந்தார். தொடர்ந்து, தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நகைச்சுவை நடிகராகவும் பணியாற்றினார். இயக்குனர் பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்திற்கு முதன் முதலாக கதை வசனம் எழுதினார்.

இதன்பின், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்க, முழுக்க நகைச்சுவையாக எழுதுவதிலும், நடிப்பதிலும் புகழ் பெற்றவர் கிரேஸி மோகன்.

You'r reading பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் மாரடைப்பால் மரணம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை