ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பா.ரஞ்சித், மாமன்னர் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலத்தை இருண்டகாலம் என்றும், சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கியது என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையாகி விட்டது. பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும்எதிர்ப்புகளும், கண்டனமும் எழுந்தது.
இதனால் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுவது, சாதி, மதம், மொழி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசியது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் பா.ரஞ்சித் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் மனு செய்து இருந்தார். இந்த ஜாமீன் மனு, கடந்த 19-ந் தேதி நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் உள்ளதாகவும், அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதனால் வழக்கு விசாரணை 2 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு 21-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் அதுவரை பா.ரஞ்சித்தை கைது செய்யவும் நீதிபதி தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை மேலும் நீட்டிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும் முன் ஜாமீன் மீதான வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார். கைது செய்வதற்கான
தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டதால் பா.ரஞ்சித் கைது செய்யபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.