தமிழக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புது விளக்கம் கொடுத்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதால் தான் பின் வாங்கியதாகவும், திமுக பதுங்குவது பாயத்தான் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோருக்கு, அதிமுக கொறடா ராஜேந்திரன் புகாரின் பேரில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதைப் பயன்படுத்தி திடீரென சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தது.இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக்கப்பட்டதை காரணம் காட்டியே உச்ச நீதிமன்றத்தில் 3 எம்எல்ஏக்களும் சபாநாயகருக்கு எதிராக தடை உத்தரவும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நாளை ( ஜூலை 1-ந்தேதி) சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 28-ந் வாதி
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய போது, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திடீரென பின் வாங்கினார். அதற்கு அவர் கூறிய காரணம், அப்போதைய சூழ்நிலையில் தீர்மானம் கொடுத்தோம். இப்போது அதற்கு அவசியப்படவில்லை என்று கூறி நழுவினார்.
இந்நிலையில், இன்று விக்கிரவாண்டியில் சமீபத்தில் மறைந்த திமுக எம்எல்ஏ ராதாமணியின் படத்திறப்பு விழாவில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின், ஒரு புதிய விளக்கத்தைக் கூறியுள்ளார். சபாநாயகரால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்து விடக் கூடாது என்பதால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் திரும்ப பெற்றோம். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துவிட்டு, திமுக பதுங்குவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குதான். பாயவேண்டிய நேரத்தில் திமுக பாயும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.