பெண் அதிகாரி குளிக்கும் போது கேமரா வைத்து படம்பிடிக்கத் திட்டமிட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையராக ஆர்.பச்சையப்பன் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 28ம் தேதி சதுரகிரி மலை கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்த பணிக்காக ஒரு பெண் அதிகாரி சென்றிருந்தார். அப்போது இணைக் கமிஷனர் பச்சையப்பனும் அங்கு வந்திருந்தார்.
அப்போது, அங்குள்ள குளியல் அறையில் பெண் அதிகாரி குளிக்கச் சென்றிருக்கிறார். அந்த அறைக்குள் ஒரு பேண்ட் தொங்கியுள்ளது. அதில் சொருகி வைக்கப்பட்டிருந்த பேனாவில் சின்னதாக சிவப்பு விளக்கு தெரிந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த பெண் அதிகாரி, பேனாவை எடுத்து பார்த்த போது அதில், கேமரா இருப்பது தெரிந்தது. தன்னை குறிவைத்துதான் இந்த கேமரா ஆன் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் உணர்ந்தார்.
அதன்பின்பு, அந்த பேண்ட் பச்சையப்பனின் பேண்ட் என்றும் அவர்தான் அங்கு வைத்திருக்கிறார் என்பதும் தெரிந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி, சக ஊழியர்களிடம் இது பற்றி கூறியிருக்கிறார். அவர்கள் உடனே, ‘நீங்கள் இது குறித்து போலீசில் புகார் செய்யாவிட்டால், உங்கள் மீது வேறு ஏதாவது களங்கம் கற்பித்து விடுவார்கள்’’ என்று எச்சரித்தனர். இதையடுத்து, சாப்டூர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் அதிகாரி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து பச்சையப்பனை கடந்த 4ம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கமாக, ஒரு அரசு ஊழியர் கைதாகி விட்டாலே, அவரை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள். ஆனால், பச்சையப்பன் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தயங்கினார். பச்சையப்பனை சஸ்பெண்ட் செய்யாமல் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் அனுப்பினார்.
மேலும், மதுரை மண்டல இணை ஆணையர் பொறுப்பை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையரிடம் கூடுதலாக ஒப்படைத்து ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.
இதற்கிடையே பச்சையப்பன் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அந்த பெண் அதிகாரி மற்றும் கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி, ஆணையரிடம் ஒரு அறிக்கை அளித்தது. அதில் பச்சையப்பன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து, அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார்.